Thursday, January 28, 2010

பெருமானே சிவ பெருமானே - 25 (பகுதி ஒன்று )

ராவ் பகதூர்  சாதே என்பவர் பாபா பக்தராம்
அவரிடம் மெகா என்ற பிராமண சமையல்காரர் இருந்தாராம்
அவர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தியுடையவராம்
சாதே அவரிடம்"நான் உனக்கு சிவா அவதாரத்தை
 நேரில் காட்டுகிறேன் என்றாராம்.
நீ ஷிர்டி சென்று பாபாவை தரிசித்துவா என்றாராம்.
மெகா பயணிக்க நினைக்கையில் பாபா ஒரு முஸ்லிம் என்று அறிந்தாராம்
பிராமண குலத்தவர் முஸ்லிம் ஒருவரை தரிசிக்கலாகாது என்று எண்ணினாராம்
மீண்டும் சாதே வற்புறுத்தவே ஷிர்டி சென்றாராம்
பாபா அவரைக்கண்டதும் ,"அவனை உள்ளே விடாதீர்கள்.
அவன் உயர் ஜாதி பிராமணன் நான் கீழ் ஜாதி என்றாராம்.
என்னை தரிசித்தால் அவருக்கு இழுக்கு" என்றாராம்.
தன்னை மன்னிக்குமாறு மெகா பாபாவிடம் வேண்டினாராம்.
பாபா சாந்தமடைந்தாராம்.
 மேகா அவருக்குரித்தான  முறையில்   பணிவிடை செய்தாராம்.
பின்னர் த்ரயம்பகேஷ்வர்   சென்று ஒரு வருடம் தங்கி இருந்தாராம்.
அங்கு சிவனை பாபாவாகவே நினைத்து வணங்கினாராம்
பின்னர் ஷிர்டி வந்து பாபாவுக்கு பணிவிடை செய்ய ஆரம்பித்தாராம்.
தினமும் பல காத தூரம் நடந்து வில்வ பத்திரங்களை சேகரிப்பாராம்
கண்டோபா கோவிலில் சிவா தரிசனம் செய்து விட்டு மசூதிக்கு வருவாராம்.
பின்னர் பாபா அமரும் ஆசனத்திற்கு பூசை செய்வாராம்.
பிரகி பாபாவிற்கு பாத பூசை செய்து நீரை "கங்கா தீர்த்தம்"
என்று உரத்து சொல்லி அருந்துவாராம்.
ஒரு நாள் அவர் கதவு திறவாமையால் கோவிலுக்கு
 செல்லாமலே பாபாவைத் தரிசிக்க  வந்து விட்டாராம்.
பாபா"இப்போது திறந்திருக்கிறது" என்றாராம்
கோவிலைத்தான் குறிப்பிடுகிறார் என்று அறிந்து மேகா வியந்தாராம்.
பாபாவை சிவனாகக் கருதி அவரை கங்கை நீரால் நீராட்ட விரும்பினாராம்.
பாபாவோ"நான் முஸ்லிம்.எனக்கும் கங்கா நீருக்கும் என்ன தொடர்பு?" என்றாராம்.
"இல்லை நீர்தாம் நான் வணங்கும் சிவன்" என்று மேகா சொன்னாராம்.
பாபாவை ஒரு ஆசனத்தில் அமர செய்தாராம்.
குடத்து நீரை ஊற்று முன் பாபா
"என் உடம்பில் படாமல் தலையில் மட்டும் ஊற்று" என்றாராம்.
ஆனால் மேகாவோ"ஹர கங்கே" என பரவசமாய் கூவினாராம்.
நீரை உடல் முழுதும் ஊற்றினாராம்.
பிறகு பாபாவின் பாதங்களில் வணங்கி எழுந்தாராம்.
 பாபாவின் தலை மட்டுமே நனைந்திருக்கக் கண்டாராம்.
சிரசில் கங்கை தரித்த கங்காதரன் சாய் என்றே எண்ணினாராம்
நான் வணங்கும் சிவனே நீர்தாம் என வணங்கினாராம்.
உண்மையான பக்தருக்கு பாபாவே சிவனாக ,பண்டரிவிடலனாக
அல்லா,இயேசுவாக அவரவர் வணங்குமுறைக்கேற்ப காட்சியளிப்பார் என்பதே
இந்த சம்பவத்தின் கருத்தாகும்


  

Wednesday, January 27, 2010

ஆறு மனமே ஆறு - 25

சாந்தோர்கரின் மகள் பிரசவ வலியால் துன்புற்றாராம்.
பாபா தக்க தருணத்தில் உதி அனுப்பிக் காத்தாராம்.
சில  காலம் சென்றதும் மருமகனும்  பேரனும் மேலுலகை அடைந்தனராம்.
சாந்தோர்கர் "உங்கள் ஆசி கிட்டிய பிறகும் இந்நிலை நேரலாமா?" என்றாராம்.
"பிறப்பதும் இறப்பதும் முன் கர்மாவின் பலன்.
அதை என்னால் மாற்ற இயலாது.
முன்கூட்டி நடப்பதை என்னால் அறிய முடிகிறது அவ்வளவே." என்றாராம்.
நானா,"பாபா! நான் சம்சார பந்தத்தை துறக்க விரும்புகிறேன்" என்றாராம்.
"நானா!துக்கத்தினால் நீ பிதற்றுகிறாய்.
இறுதிவரை அனைவருமே ஏதோ ஒரு தளையில் சிக்குகிறோம்.
மற்றவர்கள் துயரை ஏற்கும் எனக்கே அது ஒரு தளைதான்
உலகில் மனிதன் ஏற்ற தாழ்வுடன் வாழ்வதாக நீ நினைப்பாய்.
ஆனால் அவரவர் கர்மா படிதான் அவை அமைகின்றன.
மனிதனுக்குப் பகை, காம, க்ரோத,லோப,மோக,மத, மாச்சர்யம் ஆகியவை.
இந்த ஆறும் மாயையால் தோன்றுவதாகும்.
செல்வந்தர்கள் செடிகளைப்போல் பணிந்து நடக்க வேண்டும்.ஆனால் கொடியவர்களிடம் கடுமையாய்  நடக்க வேண்டும்.
அற வழியில் பொருளீட்டி செலவு செய்ய வேண்டும்.
ஆனால் அளவுக்கு மிஞ்சி தானம் செய்ய வேண்டாம்.
பிறவிகளில் மானிட பிறவி உயர்ந்தது.
அதுதான் தன்னைப் படைத்தவனை ஆராதிக்கிறது
உருவ வழிபாடு சிறந்தது.
அதில்தான் மனம் லயித்து ஒரு நிலை படுகிறது
ஹரி "யார்" என்று அறியாமல் பண்டரிபுரம் செல்வது வீண்
பிறர் மதிக்க பக்தியை பறை சாற்ற செல்வது வீண்.
சித்தர்களையும் சாதுக்களையும் வழிபடுங்கள்.
ஆசையை அடக்கி மனத்தை இருத்தி ஆத்மாவை தூய்மையாய் வைத்திருங்கள்.
நிம்மதி கிட்டும்"
இவ்வாறெல்லாம் பாபா செய்த போதனையால் நானா மனம் தெளிந்தாராம்
அடக்க வேண்டிய ஆறும் நாமெல்லாரும் கடக்க வேண்டிய ஆறு.
இந்த தத்துவ முத்துக்களை உதிர்த்த திரு பாபாவை வணங்குவோம்.

Thursday, January 21, 2010

நவ வித பக்தி - 24

புனே நகரிலிருந்து ஆனந்தராவ் பதங்கர் என்பவர் ஷிர்டி வந்தாராம்.
வேதங்கள்,புராணங்கள் யாவும் படித்தும் நிம்மதி இல்லை என்றாராம்
பாபாவை வணங்கி நிம்மதிக்கு வழி கேட்டாராம்.
பாபா அவரிடம் இவ்வாறு கூறினாராம்:
"இங்கு ஒரு வியாபாரி வந்தார்
அவர் முன் ஒரு குதிரை ஒன்பது சாணம் முட்டை இட்டது
அவன் அதை கவனத்துடன் தன வேட்டி நுனியில் இட்டுக் கொண்டான்
இதனால் அவனுக்கு மன நிம்மதி கிட்டியது " என்றாராம்
பதங்கருக்கு ஒன்றும் விளங்கவில்லை என்றாராம்
அருகே இருந்த தாதா கேல்கர் சொன்னாராம்.
"எனக்குப் புரிந்ததை சொல்கிறேன்.
ஒன்பது சாண முட்டைகள் என்ன தெரியுமா?
அவை உண்மையான பக்தியின்  ஒன்பது வடிவங்களாகும்.
இறைவனின் நாமத்தை கேட்டல்,நினைத்தல்,துதித்தல்,பாதங்களில் வீழ்தல்,அர்ச்சித்தல்,சேவை செய்தல் ,பணிந்து வணங்கல் ,இறைவனுடன் தோழமை கொள்ளல் ,ஆத்மா நிவேதனம் செய்தல் ஆகியவை" என்றாராம்.
பக்தி இல்லாத பூஜை,இறை துதி,வேத புத்தகம் படித்தல் இவை வீண் என்றாராம்.
நீங்களும் அந்த வியாபாரியாக உங்களைக் கருதி
 அந்த ஒன்பது  முறைகளைப் பின் பற்றினால் நிம்மதி கிட்டும் என்றாராம்.
மறுநாள் பதங்கர் பாபாவை சந்தித்த பொது" அந்த ஒன்பது  முட்டைகளை
சேகரித்தீரா ?"என்றாராம்.
"உங்கள் கருணை இருந்தால் முடியும்" என்று பதங்கர் சொன்னாராம்.
மனம் ஒன்றாமல் ஒரு சடங்காகச் செய்வது பக்தி அல்ல.
படிப்படியாக மனம், உடல் ,பொருள் ஆவி ஆகிய அனைத்தையும் பரிபூரணமாக இறைவனின் பாதத்தில் அர்ப்பணித்து சரணாகதி அடைவதே பக்தி என்பதே இதன் பொருள்.
உண்மையான பக்திக்கு விளக்கம் சொன்ன சாயினாதரை வணங்கிடுவோம்.

Friday, January 15, 2010

விஷ்ணு சஹஸ்ரநாம மகிமை - 23

ராமதாசி ஒருவர் ஷிர்டி வந்தாராம்
தினமும் குளித்தபின் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்பாராம்
பாபாவும் அவர் படிப்பதை கேட்பாராம்
ஒரு நாள் அவரிடம் தனக்கு வயிறு வலிக்கிறது,
அதனால் கடைக்குச் சென்று மருந்து வாங்கி வர வேண்டும் என
ராம்தாசியைப்  பணித்தாராம்.
அவர் சென்றதும் ஷ்யாமா என்றழைக்கப்படும்
திரு மாதவராவ் தேஷ்பாண்டேயிடம் அந்த புத்தகத்தைக் கொடுத்தாராம்
ஷ்யாமா என்பவர் பாபாவின் பேரன்பிற்குரித்தானவராம்.
இறுதிவரை பாபாவிற்குத் தொண்டு புரிந்தவராம்
"நீ இந்தபுத்தகத்தை எடுத்துச் செல்
தினமும் இதிலிருந்து ஒரு நாமமாவது சொல்.
எனக்கு ஒரு முறை நெஞ்சு வலி ஏற்பட்டது.
நான் ஹரி நாமம் சொல்லியபடி இந்த புத்தகத்தை மார்போடு
அணைத்துக் கொண்டேன். வலி நீங்கியது." என்றாராம்.
திரும்பி வந்த ராமதாசி கோபம் அடைந்தாராம்.
உடனே பாபா அவரிடம்
"உண்மையான பக்தன், ராம நாமம் சொல்பவர் இப்படி உணர்ச்சி
 வயப்படலாமா ?"   எனக்கேட்டாராம்.
ராமதாசி அந்த புத்தகத்திற்குப் பதில் வேறொன்றை எடுத்துக் கொண்டாராம்.
ஷ்யாமாவிற்கு ராமநாமம் சொல்லும் வழக்கத்தை ஏற்படுத்தி
அவருக்கு நற்கதி அளிக்கவே சாயி நாதர் புரிந்த
 லீலை அது என உணர்ந்து நாமும்தினமும் ராம நாமம்
 சொல்ல உறுதி எடுத்து 
அந்த சாயி ராமனை வணங்குவோம்.

Thursday, January 14, 2010

குருவின் கட்டளை - 22

காகா என்று அன்புடன் அழைக்கப்பட்டாராம்
பிராம்மண குலத்துதித்த நற்செல்வராம்
ஹரிசீதாராம் தீசித் என்ற திருமகனாராம்
பெரும் செல்வராய் நீதிதுறையில் இருந்துவந்தாராம்
ஒரு விபத்தில் காலை இழந்தாராம்
அவரை பாபாவிடம் செல்லுமாறு நானா அனுப்பினாராம்
நேரில் கண்டதும் ஷிர்டியிலேயே தங்கிட முனைந்தாராம்
பாவும் அவரை ஆங்கே தங்கி யோகம் செய்யப் பணித்தாராம்
தான் தங்குவதற்காக ஒரு தங்குமிடத்தைக் கட்டினாராம்
அதுவே பின்னர் " தீட்சித் வாடா"என ஆயிற்றாம்
ஷிர்டி யாத்ரிகர்களுக்கு தங்குமிடமாயிற்றாம்.
அவர் சாயிடம் இணையில்லா பக்தி கொண்டிருந்தாராம்
ஒரு முறை உணவில்லாமல் உடல் மெலிந்து நலிந்த நிலையில்
 ஆடு ஒன்று நுழைந்ததை பாபா கண்டாராம்
பாபா டோபா என்வரை அழைத்து இந்த ஆடை வெட்டி விடச்சொன்னாரம்
அது பாபச்செயல் என்று அவர் மறுத்து விட்டாராம்
ராதா கிருஷ்ண ஆயியோ கத்தி தர மறுத்தாராம்
ஷாமா மற்றும் பலர் இது  பாபம் எனக் கருதினாராம்
பாபா தீட்சித்திடம் ஆட்டை  வெட்டச் சொன்னாராம்
வைதீக பிராமணரான அவரோ பாபாவின் கட்டளையை சிரம்
 மேல் கொண்டாராம்
கத்தியை எடுத்து வெட்ட சென்றாராம்
பாபா அவரைத்தடுத்தாராம்
"இந்த ஆடு இன்னும் சிறிது நேரத்தில் இறக்கப் போகிறது
ஆயினும்
 என் கட்டளையை யார் மதிக்கிறார் என சோதித்தேன்" என்றாராம்
பாபாவின் சோதனையில் தீசித்  புடமிட்ட தங்கமானாராம்
எனவேபாபா "என் காகாவை நான் விம்மானத்தில் ஏற்றி செல்வேன்" என்றாராம்
உண்மையான பக்தருக்கு அனாயாச மரணம் அளிப்பார் என்பது அதன் பொருள்
அவ்வாறே ஒரு ஏகாதசியில் உயிர் நீத்த பெருமானை வணங்கி
அவருக்கு அப்பேற்றை அளித்த சாயி ராமனை வணங்குவோம்

Thursday, January 07, 2010

தத்தாத்ரேயரின் மறு அவதாரம் - 21

பாபாவின் அவதார மகிமையை சிலர் சந்தேகித்தனராம்
மார்கழி மாதம் பஞ்சமி திதி அன்று யாவரும் கூடி இருந்தனராம்
தத்தாத்ரேயரின் நினைவு தினமாக யாவரும் வணங்குவராம்
திடீரென பாபா சிலரைத் தடியால் அடித்தாராம்
எனக்குப் பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது என்றாராம்
பல்வந்த் கைஜாக் என்பவரை உள்ளே கூப்பிட்டாராம்
உள்ளேசென்ற கைஜாக் திகைத்தாராம்
பல கரங்களுடன் மும்முகத்துடன் குழந்தை இருக்கக் கண்டாராம்
அனைவரும் சென்றபோது பாபா மட்டுமே இருந்தாராம்
தத்தாத்ரேயர் அவரே என்று அறிந்தனராம்
பாபாவின் அவதார மகிமையை உணர்ந்தனராம்
அற்புதராம் அந்த தத்தாத்ரேயரை வணங்குவோம் சாய்ராம்

Wednesday, January 06, 2010

மந்திரமாவது நீறு - 20

மந்திரமாவது பாபா விபூதி
இதந்தருவது பாபா விபூதி
அருமருந்தாவது பாபா விபூதி
திருவருளாவது பாபா விபூதி
கர்மங்கள் தொலைய பாபா விபூதி
அகந்தையை ஒழிக்க பாபா விபூதி
மாயையை உணர பாபா விபூதி
முக்தி அளிக்க பாபா விபூதி
பாபா விபூதி பரம பவித்ரம்
பாபா விபூதி லீலா விசித்ரம்
சமஸ்த சத்குரு ஸ்ரீ சாய் நாத மகாராஜ் கீ ஜெய்
சமஸ்த சத்குரு ஸ்ரீ சாய் நாத மகாராஜ் கீ ஜெய்
சமஸ்த சத்குரு ஸ்ரீ சாய் நாத மகாராஜ் கீ ஜெய்

நிரந்தர துனியும் உதியும் - 19

ஒருநாள் த்வாரகமாயியில் பக்தர்கள் கூடிஇருந்தனராம்
பாபா ஹூக்கா பிடிக்க விரும்பினாராம்
ஹூக்கா ஏற்ற நெருப்பு கேட்டாராம்
நெருப்புக்கு பாபா அலைவதேன் என்று பக்தர்கள் வருந்தினாராம்
நிரந்தர ஏற்பாடு செய்யலாமே என்றனராம்
பாபா எழுந்து சென்று குச்சியால் தட்டினாராம்
ஆங்கே நெருப்பு எரிந்ததும் இவ்வாறு சொன்னாராம்
"இந்த நெருப்பு இனி என்றும் அணையாது" என்றாராம்
விறகு கட்டைகளை எரித்துக்கொண்டே இருங்கள் என்றாராம்.
கட்டைகளையா எரித்தார் ?
அதில் பாபா நமது அகந்தையை எரித்தார் என்றனராம்
துனியில் இருந்து வரும் சாம்பல் உதி என்றாராம்
அந்த புனித உதியே நோய் தீர்க்கும் மருந்து என்றாராம்.
அற்புத உதி அளித்த மருந்தீச்வர சாயை வணங்குவோம் சாய் ராம்

பாபாவின் உதிஎன்னும் மருந்து - 18 (டாக்டர் பிள்ளை)

டாக்டர் பிள்ளை என்றொரு பக்த சீலராம்;
பாபா அவரிடம் பேரன்பு கொண்டாராம்;
ஒரு சமயம் காலில் சீழ் பிடித்து பிள்ளை துன்பமுற்றாராம்;
காகா சாகேப் தீக்ஷித் என்பவரிடம் இவ்வாறு சொன்னாராம்;
"என்னால் பொறுக்க இயலவில்லை” என்று கதறினாராம்;
“என் கர்ம பலன்களின் விளைவு இது என்பதை அறிவேன்” என்றாராம் ;
“இனி வரப்போகும் பிறவிகளில் நிரவி விடும்” என்றாராம்;
“நான் இறக்க விரும்புகிறேன் என்று பாபாவிடம் சொல்லும்" என்றாராம்;
இதை கேட்ட பாபா "அவரை இங்கே எப்படியாவது இட்டு வாரும்" என்றாராம்;

தலை அணையைக் கொடுத்து, "அமைதியாகப்படுத்திரு” என்றாராம்;
“எதற்காகப் பல பிறவிகளிலும் கஷ்டப்பட எண்ணுகிறாய்? என்றாராம்;
“நான் இருக்கும்போது சாவைப்பற்றி நினைக்காதே.” என்றாராம்;
“நான் உனக்கு ஆன்ம ரீதியாக அமைதி தருவேன்.” என்றாராம்;
“அல்லாவிடம் உன் மனம், உடல், வாக்கு ,செல்வம்
யாவையும் அர்ப்பணி” என்றாராம்.
மேலும்” உன்னை ஒரு காகம் கொத்தும் பின் உன் பிணி நீங்கும்" என்றாராம்.
அவ்வமயம் மசூதியை சுத்தம் செய்ய அப்துல் என்பவர் வந்தாராம்;
நீட்டி இருந்த காலை தெரியாமல் மிதித்து விட்டாராம்;
கட்டி உடைய சீழ் வெளிப்பட பிள்ளை அலறி விட்டாராம்;
மறுகணமே ஆனந்த கூத்தாட துவங்கினாராம்;
கொத்திய காகம் அந்த தொழிலாளி என்று அறிந்தாராம்.
பாபா அவருக்கு பூரண குணமடைய உதி அளித்தாராம்.
இந்த அற்புத லீலை செய்த சித்தர் சாயியை வணங்குவோம்...சாய்ராம்.---------------------------------------------------------------------------------------------------------------------------------------

வைத்யநாத சாய் - 17(கோதுமைஅரைத்தது)

ஹேமட்பந்த் நேரிடை கண்டதாக கூறும் சாயி நாதன் அற்புதத்தை கேட்போம்
1910 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு நாள் சாயியை காணச் சென்றாராம் ;
அவர் அங்கு கண்டதை பார்த்து வியந்தாராம்.;
திரு சாயி வாயையும் கரங்களையும் சுத்தம் செய்து கொண்டாராம்;
பின்னர் ஒரு சாக்குப் பையை விரித்தாராம் ;
கோதுமை தானியத்தை திருகையில் அரைக்க துவங்கினாராம் ;
தினமும் பாபா வீடுகளில் இரந்தே உண்பாராம் ;
எனவே இவர் யாருக்காக அரைக்கிறார் என எண்ணினாராம் ;
ஊர் மக்களும் கூட ஆரம்பித்து தாமும் அவருடன் அரைத்தனராம்;
தங்களுக்கு அளிக்கப்போகிறார் என்றே எண்ணினராம்;
அரைத்ததும் மாவை பங்கிட ஆரம்பித்தனராம்;
இதைக்கண்ணுற்ற பாபா பெருங்கோபம் கொண்டாராம்;
"யாரைகேட்டு இதை எடுக்கிறீர்கள்?" என்று கூச்சலிட்டாராம்;
மாவைகொண்டு போய் ஊர் எல்லையில் கொட்டச்சொன்னாராம்;
அச்சமயம் நிலவிவந்த  கொள்ளை நோயையே அவர் வெளியே கொட்டினாராம்
திருகையில் பொடித்தது விட நோயையே என்றறிந்தனராம்;
எல்லையில் கொட்டி ஜன நலம் காத்தார் என எண்ணினாராம்
சாயி அன்பர்கள் மேலோட்டமாய் இதை  அறிந்தனராம்;
எளிய விளக்கம் அன்று என்று சிலர் உணர்ந்தனராம
அதன் தத்துவ விளக்கத்தையும் பக்தர்கள் விளக்கினாராம்
பாபா ஞானம் என்ற பிடியைப் பிடித்தாராம்;
பக்தி என்ற கல்லால் நமது கர்மங்களை அன்றோ பொடித்தாராம்
இந்த அற்புத வைத்தியம் அளித்த வைத்யநாத சாயியை வண ங்குவோம் சாய் ராம்.

நானா சாஹிப்பிற்கு செய்த போதனை - 16

நானா சாஹேப் சாந்தோர்கர் சிறந்த பக்தராம்.
அவர் பகவத் கீதையை படித்தறிந்தவராம்
தன்னுடைய சமஸ்க்ருத மொழிபுலமையில் பெருமிதம் கொண்டவராம்.
பாபாவிற்கு சமஸ்க்ருத ஞானம் இல்லைஎன்று எண்ணினாராம்.
ஒருநாள் அவர் பாபாவின் பாதங்களை பிடித்துக் கொண்டிருந்தாராம்.
பாபாஅவரை"என்ன முணுமுணுக்கிறாய்?" என்றாராம்.
"பகவத் கீதையிலிருந்து ஒரு தோத்திரம்" என்றாராம்,
பாபா அவரை அந்த தோத்திரத்தை உரத்து சொல்ல சொன்னாராம்.
அவர் சொன்னதும் "உஅனக்கு பொருள் புரிந்ததா" என்றாராம்.
"குருவை நமஸ்கரித்து ,அவரிடம் சந்தேகங்களைக் கேட்டுத்தெளிந்து
ஞானம் பெற வேண்டும்" என்றாராம்.
பாபாஅவரைக் கீழ் கண்டவாறு கேட்க ஆரம்பித்தாராம்
பாபா : "ப்ரணிபாத என்றால் என்ன ?
நானா:அடி பணிவது
பாபா: அடி பணிந்தால் போதாது.உடல் ,பொருள்,மனம் அனைத்தையும்
அர்பணித்து குருவின் அடி பணிதல் வேண்டும்.
பாபா:பரி ப்ரஷ்னா என்றால் என்ன?
நானா: கேள்வி கேட்பது.
பாபா:ப்ரஷனா என்றால்?
நானா:கேள்வி கேட்பது.
பாபா:பின் பரி என்ற வார்த்தை எதற்கு?
பாபா: குருவின் அறிவை சோதிப்பது போல் கேட்காமல்
முக்தி அடைய ஞானத்தைப் போதிக்க கேள்வி கேட்க வேண்டும்.
பாபா: சேவை என்றால் என்ன?
நானா:நாம் எப்போதும் செய்வதுதான்.
பாபா: சேவை என்பது தன் உடல் ஒன்று இருப்பதையே எண்ணாமல்
தன்உடம்பு குருவுடையது , குருவிற்கு தொண்டு புரிவதே தான்
ஜீவித்திருப்பதன் பயன் என்று எண்ணி தொண்டு செய்வது.
பாபா: ஞானத்தை போதிப்பது என்றால் என்ன?
அஞானமாகிய இருட்டை போக்கி,ஞான ஒளி பெற வேண்டும்.
நான் ஒரு ஜீவன் குரு ஒரு ஜீவன் என எண்ணம் கூடாது.
எல்லாம் ஒன்று ,என்னுள்ளும் இறை அம்சம் உள்ளது என எண்ண
வேண்டும்.
இறைவன், உடல், ஆத்மா யாவும் ஒன்றே என
ஐக்கிய பட வேண்டும்.
கிருஷ்ணனே எல்லாம் அறிந்தவராக இருக்கும் போது
ஏன் அர்ஜுனனை மற்ற குருவிடம்
அனுப்புகிறார்?
உண்மையான பக்தனுக்கு எல்லா ஞானியும் கிருஷ்ணராக தெரிவார்.
குருவோ எல்லா சீடர்களையும் கிருஷ்ணனாகவே பார்ப்பார்.
தான் ஒரு ஜீவன் என்ற உணர்வை,அஞானத்தை நீக்கவே
குரு உபதேசம் அவசியம்."
இவ்வாறெல்லாம் ஸ்ரீ பாபா நானாவுக்கு உபதேசித்தாராம்.
நானாவின் மமதை என்ற குமிழை உடைத்தாராம்.
இந்த அற்புத அறிவுரை தந்த ஞான குருவிடம் பரிபூரண சரணாகதி
அடைவோம்.ஸ்ரீ சாய் ராம்.
நானா ஒரு   பழுத்த வைதீக குடும்பத்தைச் சேர்ந்தவராம்
.தினமும் ஒரு அதிதிக்கு உணவு அளித்த பின்னரே உண்பாராம்.
ஒரு நாள் அதிதி எவரும் வராமல் பாபாவிடம்  புலம்பினாராம்
நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாததென வேதத்தை குறை கூறினாராம்.
பாபா இவ்வாறு சொன்னாராம்:
"பூஜை முடிந்ததும் உணவை வெளியில் வைத்து விடு.
அதிதி என்றால் பிராமணன் மட்டும்  என்று எண்ணாதே.
காகம், எறும்பு, நாய் யாவையும் அதிதிகள்தாம் " என்றாராம்.  
ஒரு நாள் பாபா திரு நானா சாந்தோகரிடம் இவ்வாறு சொன்னாராம்:
"எட்டு போளிகளை எனக்கு நிவேதனம் செய் என்றாராம்
பாபா அதை உண்பார் என்று நானா  காத்திருந்தாராம்
ஈக்கள் மொயத்துக்கொண்டிருப்பதை பார்த்தாராம்
சிறிது நேரம் கழித்து பாபா பிரசாதம் எடுத்துக் கொள் என்றாராம்.
நானாவோ "நீங்கள் அதை தொடவே இல்லையே" என்றாராம்.
"இந்த எண் சாண் உடம்புதான் பாபாவா?
போளிகளில் அமர்ந்த ஈ எறும்பில் நான் இல்லையா?" என்றாராம்.
பிறகு கர சமிக்யை செய்து தான் யார் என உணர வைத்தாராம்.
பக்தர்களின்  மன இருளை நீக்கி ஒளி அளிக்கும் ஸ்ரீ சாயியை வணங்குவோம்.

பக்த சீலர் மகால்சாபதி - 15

சிவனுக்கோர் நந்தியைபோல் பாபாவின் சீடரானாராம்.
மகால்சாபதி என்ற நற்குணவான் பாபாவின் அருளைப் பெற்றாராம்.
பக்தி, ச்ரத்தை,பூரண சரணாகதி என்று சிறந்து விளங்கினாராம்.
ஏழ்மை நிலையிலும் பிறரிடம் பணமா வாங்க மறுத்து விடுவாராம்
பாபா ஒரு நாள் அவரை தன் அருகே அழைத்தாராம்.
பாபா ஆழ்நிலை சமாதிக்கு செல்லு முன்தன் உடலை காக்க பணித்தாராம்
" 36 மணி நேரம் என் உடலருகே இரு.நான் திரும்பி வராவிடில் திறந்த வெளியில் புதைத்து விட்டு இரு கொடிகளை நட்டு விடு" என்றாராம்.
பாபா வாக்கை தேவ வாக்காக எண்ணி பாது காத்தாராம்.
ஊர் மக்கள் பாபா இறந்து விட்டார் என்று எண்ணினராம்.
உடலை எரிக்க சொல்லி மகால்சாபதியை வற்புறுத்தினராம்
பக்த சீலரோ வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்தாராம்
ஊண்,உறக்கம்,மனித உடல் தேவைகளை மறுத்து பாதுகாத்தாராம்
சமாதியிலிருந்து வெளி வந்த பாபாவின் பரி பூரண ஆசியைப் பெற்றாராம்.
பாபாவுடன் சாவடியிலும் மசூதியிலும் இரவும் பகலும் கழித்தாராம்.
பாபா அவரை வற்புறுத்தி மனைவியுடன் இருக்க பணித்தாராம்.
வம்ச வ்ருத்தி செய்ய சொன்னாராம்.
மகன் பிறந்ததும் மீண்டும் பாவிடம் வந்து சேர்ந்துவிட்டாராம்
இத்தகைய பக்த சீலரின் வரலாற்றை படித்து நாமும் அத்தகைய குண நலன்களைப் பெற வேண்டும்.

அற்புத தீபம் - 14

மசூதியில் நிறைய விளக்குகள் சாய் ஏற்ற சாய் விரும்புவாராம்.
பலகடைக்காரர்களையும் ஆவலோடு அணுகுவாராம்
தினமும் இரந்து எண்ணெய் பெறுவாராம்.
இதை விரும்பாத சிலரும் இருந்தனராம்.
எண்ணெய் கொடுக்க கூடாது என தீர்மானித்தனராம்.
மற்றவரிடமும் மறுக்கச் சொல்லி வற்புருத்தினராம்
சாயி எண்ணெய் தனக்கு மறுக்கப்பட்டதை அறிந்தாராம்
சாயி நேரே .மசூதிக்குச் சென்றாராம்.
கிணற்றடிக்குச் சென்று கைகால்களைக் கழுவிக்கொண்டாராம்.
தகர குவளையில் நீர் நிரப்பிக்கொண்டாராம்.
அகல்களில் நீரை இட்டாராம்.
விளக்குகள் யாவும் எரிய தொடங்கிற்றாம்.
விளக்குகள் யாவும் எறிந்ததைக் கண்டோர் வியந்தனராம்.
எண்ணெய் மறுத்த வ்யாபாரிகள் அச்சம் கொண்டனராம்.
பாபா "நீங்கள் எண்ணெய் தர மறுத்தால் தவறில்லை என்றாராம்
ஆனால் இருந்தும் இல்லை என பொய் உரைத்தது தவறு” என்றாராம்.
நீரில் தீபத்தை ஏற்றிய அற்புதசாயியை வணங்குவோம்

ராம நவமியும் சந்தனக்கூடு விழாவும் - 13

கோபால்ராவ் என்ற ஒரு பக்தர் இருந்தாராம்
மூன்று மனைவிகள் இருந்தும் மழலை இன்றி தவித்தாராம்
பாபாவின் அருளால் மகப்பேறு கிடைக்கப் பெற்றாராம்
நன்றிக்கடனாக த்வாரக்மாயிக்கு ஏதேனும் செய்ய விரும்பினாராம்
உருஸ் கொண்டாடலாம் என நினைத்தாராம்
பாபாவும் அதற்கு சம்மதித்தாராம்.
(பெரும் ஞானியரை கௌரவிக்கும் வண்ணம் இஸ்லாமியர்கள்
சந்தன குழம்பை எடுத்துக்கொண்டு ஊர்வலம் சென்று கொண்டாடுவார்)
மேலும் ராம் நவமி அன்று கொண்டாடலாம் என்றும் சொன்னாராம்
விழா நடத்த சில தடைகள் இருந்ததைக் கண்ணுற்றனராம்
குடிநீருக்கு இரு கிணறுகள் போதாது என பயந்தனராம்
பாபாவோ துவர்ப்பு நீரை இனிப்பாக்கினாராம்
ஆம்.புஷ்பங்களைத் தூவி லீலைபுரிந்தாராம்.
தாத்யா படேல் பல ஏற்பாடுகளும் செய்தாராம்.
தற்காலிக கடைகளும் நிறுவச் செய்தனராம்
மல்யுத்தப்போட்டிகள் நடக்க ஆயத்தம் செய்தனராம்
தாமு அண்ணா என்பவர் ஒரு அழகிய கொடி தயாரித்தாராம்
நானா சாஹிப் நிமொங்கர் பூவேலை செய்த கொடி தயாரித்தாராம்
திருவிழா நடக்க துவங்கிற்றாம்
ஹிந்து கொடியும் முஸ்லிம் கொடியும் அருகருகே சுமந்தனராம்
இரு கொடிகளையும் ஊர்வலமாக எடுத்து வந்தனராம்.
மசூதியின் இரு மூலைகளிலும் நட்டனராம்
இன்றுவரை அந்த விழாவை ஷிர்டியில் நடத்துகின்றனராம்.
ராம நவமி அன்று த்வாரகமாயியில் பக்தர்கள் குழுமுகின்றனராம்
அமீர சாக்கர் தலால் என்ற முஸ்லிம் அன்பர் இருந்தாராம்
அவர் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்த விழைந்தாராம்
தாலத்தில் சந்தன குழம்பை இட்டு ஊர்வலம் செல்வராம்
ஊதுபத்தி ஏற்றி சென்று பின் மசூதி சுவர்களில் தெரிப்பராம்
இதுவும் பாபாவின் ஆசியால் ராம நவமி அன்று நடத்தினராம்
கிருஷ்ணராவ் ஜாகேஷ்வர்பீமா என்பவர் விழாவுக்கு வந்தாராம்
திடீரென உருஸ் என்பதை ராம நவமியாக்க எண்ணினாராம்.
பாபாவிடம் தன் என்ணத்தை விண்ணப்பித்தாராம்
பாபாவும் சம்மதித்து ஆசி அளித்தாராம்.
மசூதியை சுத்தம் செய்யவும் வெள்ளை அடிக்கவும் துவங்கினராம்
ராதாக்ரிஷ்ணமாயி உணவு உபசாரத்தைக் கவனித்தாராம்.
அழகிய தொட்டில் ஒன்றும் ராதா கிருஷ்ணருக்குத் தயாரித்தாராம்.
மஹா ஜானி ஹார்மோனியம் இசைத்தாராம்
பீஷ்மா கீர்த்தனங்கள் பாடினாராம்.
இறுதியில் ஜெய் ராம் என்று கோஷமிட்டனராம்.
சிவப்பு பொடியைத் தூவினராம்
பொடி பாபாவின் கண்களில் விழுந்து அவர் கூச்சலிட்டாராம்
தொட்டிலை உடைத்து விடுவரோ என்று அஞ்சினாராம்
நரசிம்மமூர்த்தியாய் காட்சி அளித்தாராம்
நொடியில் சமாதானம்அடைந்தாராம்
அரக்கர்களை தீயவையை அழிக்க ராமர்அவதாரம் எடுத்தாராம்.
அது போன்றதே பாபாவின் ஆவேசம் என்று உணர்ந்தனராம்
.அடுத்த நாள் கோபால் கல விழாவும் நடத்தினராம்
(ஒருபானையில் தயிர்,,பொரி,அரிசி ஆகியவை கலந்து வைக்கப் படுமாம். )
கண்ணனை போல் பொரியையும் அனைவர்க்கும் வழங்கினராம்.
அடுத்த ஆண்டிலிருந்து தாஸ் கனு ஹரி கீர்த்தனம் இசைத்தாராம்
வருடா வருடம் மென்மேலும் சிறப்பாக நடத்தினராம்.
சீரடி புண்ணிய தலமே சமஸ்தானம் ஆயிற்றாம்.

கலியுகத்து அவதார புருஷர் - 12 திரு தாஸ்கனு உணர்ந்தது

பாபாவின் அன்புக்குப் பாத்திரமானார் தாஸ்கனு என்பவராம்
அவர் பிரயாகைக்குச் சென்று நீராட விரும்பினாராம்
பாபாவிடம் தன் விருப்பத்தைச் சொன்னாராம்
இங்கு பிரயாகை இல்லையா என்று பாபா கேட்டாராம்
தாஸ்கனு ஒன்றும் புரியாமல் விழித்தாராம்
இங்கேயே உனக்குப் ப்ரயாகயைக் காட்டுகிறேன் என்றாராம்
மாதவராம் வித்தகராம் அந்த ஸ்ரீசாயிராம்.
தாஸ்கனு பாபாவின் பாதங்களில் தன் தலையை வைத்தாராம்
மறு நிமிடம் பாபா இரு கட்டை விரல்களிலிருந்து நீர் வரவழைத்தாராம்
பிரயாகைபிரவாகமாகபொழிந்ததைகண்டோர்வியந்தனராம்
கங்கையும் யமுனையும் இதுவே என்று தாஸ்கனு மகிழ்ந்தாராம்
புனித நீரைத்தம் தலையில் இட்டுக் கொண்டாராம்
பாபாவின் பக்தர்கள் அவர்பாத நீரை புனிதமென கருதி அருந்துவராம்
 கனு மகாராஜ் தாம் உயர்ந்த ஜாதி எனக் கருதிநீரை அருந்தாமல் விட்டாராம்.
பாபாவை அவர் ஒரு மகானாகவே கருதினாராம்
பாபாவே கடவுள் என்று அறிய மறுத்தாராம்.
தான் பிராமணன் பாபா இஸ்லாமியர் என்றே நினைத்தாராம்
பாபா சமாதியானபிறகே ஒரு மகான் மூலம் இதை உணர்ந்தாராம்
.தெய்வம் அருகே இருந்தும் உணராத தன் அகந்தயை அழித்தாராம்.
ஒவ்வொரு உயிரிலும் பகவான் உள்ளார் என்றும் எம்மதத்தவரும் அவர் குழந்தைகளே என்பதும் இறைவன் ஒருவனே என்பதும் நாம் அறிய வேண்டிய உண்மை.
இப்பூவுலகில் நம்மிடையே அவதரித்த திரு அவதாரமாம் சாயி நாதனை வணங்குவோம்

த்வாரகமாயியும் மசூதியும் - 11

ஒரு சமயம் ஷிரிடியில் பலத்த மழை பொழிந்திற்றாம்
சாயி அசராமல் சமாதி நிலையிலே இருந்தாராம்.
வேப்பமரத்தடியிலேயே அமர்ந்திருந்தாராம்.
குப்பை கூளங்கள் மேல் விழுந்த போதும் அவ்வாறே இருந்தாராம்.
அந்நிலையில் அவரைக்கண்ட மக்கள் வருந்தினாராம்.
வற்புறுத்தி ஒரு பாழடைந்த மசூதியில் இருக்க வைத்தனராம்.
அதுவே பின்னர் இந்துக்களின் த்வாரகமாயி ஆயிற்றாம்
முகமதியர் மசூதிக்கு வந்து அவர்கள் மரபில் தொழுவாராம்.
இந்துக்கள் த்வாரகமாயியிக்கு வந்து கும்பிடுவார்களாம்
இருவரும் பாபாவை உறவும் உரிமையும் கொண்டாடினராம்
இதனால் இருவரும் பகை கொள்ள ஆரம்பித்தனராம்.
ஒரு முறை மகால்சாபதி பாபாவிற்குச் சேவை செய்து கொண்டிருந்தாராம்
அங்கு வந்த இஸ்லாமியர் அவரைத் தாக்கினாராம்
"பாபா! பாபா!" என்று மகால்சாபதி அலறினாராம்
இதைக் கண்ணுற்ற பாபாமிகுந்த சினம் உற்றாராம்
"சைத்தான்களே!என்னை என் அடிக்கிறீர்கள்" என்றாராம்
"நாங்கள் மகால்சாபதியைத்தானே அடிக்கிறோம்" என்றனராம்
"மகால்சாபதியுள் நானல்லவா இருக்கிறேன் "என்றாராம்.
"என்னிடம் சரணடைந்தவருள் நான் இருப்பேன் என்றாராம்.
"மதம் பிடித்தவருள் மாதவன் உறையான்."என்றாராம்.
தவறை உணர்ந்தவர்கள் அவர் காலில் வீழ்ந்தனராம்.
"எல்லார்க்கும் இறைவன் ஒருவனே" என்ற தத்துவ பொருளாம்
சாயி ராமை வணங்குவோம்

புண்ணிய பூமி ஷிர்டி - 10 (சாந்த் படீல் குதிரை )

தூப் எனும் நகரில் சாந்த் படீல் என்பார் இருந்தாராம்;
அவுரங்காபாத் செல்லும் வழியில் அவர் தம் குதிரையை தொலைத்து விட்டாராம்
கடிவாளத்தை தோளில் போட்டபடி ஊர் திரும்பிக்கொண்டிருந்தாராம்;
வழியில் ஓர் மரத்தடியில் ஒருவர் இருப்பதைக்கண்டாராம்;
நீண்ட அங்கி ,தலையில் குல்லாவுடன் ஹூக்கா பிடித்தபடி இருந்தாராம்;
அவர் சாந்து பட்டீலை கூப்பிட்டு அருகே அமரச்சொன்னாராம்;
கடிவாளத்தைப் பார்த்ததும் என்னவென்று வினவினாராம்;
விவரம் சொன்னதும் குளத்தருகே இருக்கும் என்றாராம்;
சாந்து பட்டீலும் அவ்வண்ணமே குதிரை இருக்கக் கண்டாராம் ;
மேலும் மற்றொரு அதிசயத்தையும் அவர் கண்டாராம்;
மரத்தடி இளைஞன் குச்சியால் தரையைத் தட்டினாராம்;
தட்டிய இடத்தில் தீக் கங்கு வரவழைத்தாராம்;
மற்றொரு இடத்தில் நீர் தருவித்தாராம்;
துணியை நீரில் நனைத்து கங்குகளை குழாயில் இட்டாராம்;
அமைதியே உருவாக புகை பிடித்தாராம்;
இதைக் கண்ட படீல் அவர் மேல் மதிப்பு கொண்டாராம்;
தன் இல்லத்திற்கு வருமாறு அழைத்தாராம்;
இளைஞனும் மறுக்காமல் அவருடன் சென்றாராம்;
அவர் இல்லத்தோறும்அவர் மகிமை அறிந்தனராம்;
சீரடியில் தம் குடும்ப மண விழாவிற்கு அழைத்தனராம்;
அவர்களுடன் சென்ற இளைஞன் ஆங்கே தங்கிவிட்டாராம்;
அந்த இளைஞர்தான் முன்பு வேப்பமரத்தடியில் thangi இருந்தவராம்.
மகால்சாபதியோ அவரைக் கண்டதும் 'யா சாயீ' என்றாராம்;
அன்று முதல் அவர்கள் பூர்வ பந்தம் தொடங்கிற்றாம்;
சீரடியும் மகான் சீரடி பட்ட புண்ணிய தலமாயிற்றாம்.………………………………………………………………………

Tuesday, January 05, 2010

வேப்ப மரத்தடி இளைஞன் - 9

குருவிடம் விடை பெற்று மேற்கே நடந்த இளைஞன் ஷிர்டியை அடைந்தாராம்
மகாராட்டிரத்தின் கோதாவரி கரையில் சிற்றூராம்
சீரடி தலமதில் வேம்பு மரத்தடி அமர்ந்தாராம்
எழில் இளைஞனை அனைவரும் வியந்து நோக்கினராம்
வெயில், மழை.எதையும் பொருட்படுத்தாததை வியந்தனராம்
வேப்பமரத்தடி இளைஞர் வைத்தியமும் செய்ய ஆரம்பித்தாராம்
பச்சிலை மருந்து தயாரித்துக் கொடுப்பாராம்
வீடு வீடாகச் சென்று யாசித்து உணவு சேகரிப்பாராம்
திரவ உணவுகளை ஒரு குவளையில் இடுவாராம் வேப்ப மரத்தடி
எல்லாவற்றையும் கலந்து மனிதர்கள் விலங்குகள்
மற்றும் அனைத்து ஜீவா ராசிகளுக்கும் அன்புடன் இடுவாராம்.
உணவு உடைக்கு முக்கியத்துவமே தராமல் இருந்தாராம்.
கண்டோபா கோவில் பூசாரி ஒருவர் இருந்தாராம்
மகால்சாபத்தி என்ற பெயர் கொண்ட சீலராம்
பாபாவை பெரும் சித்தர் என உணர்ந்தாராம்
தினமும் இன்னும்சிலருடன் சேர்ந்து வணங்குவாராம்
ஒரு நாள் வேப்பமர இளைஞன் திடீரென மறைந்து விட்டாராம்.

வேம்படி புனித பாதுகாஸ்தான் ஆன வரலாறு :
(பி .வி. தியோ என்பவர் தன்னுடைய "சாயி சரிதம்"என்ற புத்தகத்தில் எழுதியபடி)
பாய் க்ரிஷஞ்சி அளிபக்கர் என்பவர் அகல்க்ஹோட்  மகாராஜ் என்ற மகானின் பக்தராம்.
அவரின் பாதுகைகளை வணங்க வேண்டு அகல்க்ஹோட் செல்ல இருந்தாராம்
அப்போது அவர் கனவில் அக்ஹல்க்ஹோட் மகாராஜ் தோன்றினாராம்
"இப்பொழுது சீரடிதான் என் இருப்பிடம்.அங்கு செல் என்றாராம்."
அதன் பின் ராம் ராவ் கோதாரி என்ற மருத்துவர் தன் கம்பவுண்டரையும்
நண்பர் பாய் க்ரிஷஞ்சியையும் சிரடிக்கு வருமாரி அழைத்தாராம்
அங்கு சென்றதும் திரு சாய் நாதரின் பக்தர்கள் ஆகிவிட்டனாறாம்
முதன் முதலாக சாய் வந்தமர்ந்த வேம்பு மரத்தடியில் அந்த சம்பவத்தின் நினைவாக அவரின் பாதத்தை பிரதிஷ்டை செய்ய விரும்பினாராம்.
மருத்துவர் ராமராவ் அழகிய வடிவமைப்பு செய்தாராம்
கண்டோபா கோவிலில் இருந்த உபாசனை மகாராஜிடம் ஆலோசனை கேட்டாராம்
அவர் அந்த பாதுகைகருகில் ஒரு தாமரை சங்கு சக்ரம் போன்றவற்றையும் வடிவமைத்தாராம்
கீழ்வரும் ஸ்லோகத்தையும் எழுதி கொடுத்தாராம்
"சதா நிம்ப வ்ருக்ஷச்ய மூலாதிவாசத்
சுதா ஸ்ரவினம் திக்தமபிஅப்ரியந்தம் ,
தரும் கல்ப வ்ருக்ஷாதிகம் சாதயந்தம்
நமாமீஷ்வரம் சத்குரும் சாய் நாதம் "

பிறகு பாதுகை வடிவமைக்கப் பட்டு கண்டோபா கோவிலிலிருந்து த்வாரகமயிக்கு ஊர்வலமாக கொண்டு வர பட்டதாம்
திரு சாய் அதை தொட்டு ஆசித்து 'இது இறைவனை பாதம்"வேம்பு மரத்தருகே பதியுங்கள்" என்றாராம்

சரவண மாதம் பவுர்ணமி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.

எல்லாம் அவனுக்கே சமர்ப்பணம் - 8

இறைவனுக்குப் படைத்தலும் பகிர்ந்து உண்ணலும்

சந்தீபணி என்ற குருவிடம் ஸ்ரீ கிருஷ்ணர் சீடராக இருந்தாராம்
சுதாமா என்ற சிறுவனும் உடன் பயின்றாராம்.
குரு ஒரு நாள் காட்டிலிருந்து சுள்ளி கொணர பணித்தாராம்.
கிருஷ்ணர்,பலராமர் இருவரும் புறப்பட்டனாறாம்.
குருவின் மனைவி சுதாமாவிடம் நெல்மணிகளைக் கொடுத்தாராம்.
பசி எடுத்தால் மூவரும் பகிர்ந்துண்ணுங்கள் என்றாராம்.
காட்டில் அவர்கள் களைப்படைந்தன ராம்
கிருஷ்ணர் சுதாமா மடியில் படுத்து உறங்கிவிட்டாராம்.
அவ்வமயம் சுதாமா நெல்மணிகள் அனைத்தையும் உண்டு விட்டாராம்
துயிலெழுந்த கண்ணன் "ஏதேனும் உண்டாயா?" என்றாராம்.
எதுவுமில்லைஎன சுதாமா மறுத்துவிட்டாராம்.
"எனக்கு கொடுக்காமல் எதையும் நீ உண்ண மாட்டாய்.
ஆயினும் அப்படி ஒரு கனவு வந்தமையால் கேட்டேன்" என்றாராம்.
(இந்த செயல் பிற்காலத்தில் சுதாமாவை ஏழ்மையில் பிடித்து தள்ளியது.
ஆனால் அவர் மனைவி கையால் செய்த அவலை தானே கொண்டு சென்று
கிருஷ்ணனுக்கு அளித்ததும் சுதாமாவிற்கு வறுமை நீங்கியது.)
இந்த கதை நினைவிற்கு வரும் சம்பவம் ஹெமட்பந்த்துக்கு நேர்ந்தது.
பாபாவின் பாதங்களை வருடியபடி ஹேமட்பந்த் இருந்தாராம்.
அருகிலிருந்த ஷ்யாமா "உங்கள் மேலாடை மடிப்பில்
நெல் மணிகள் ஒட்டி உள்ளன" என்றாராம்.
பிரித்துப்பார்த்த ஹெமாத் திகைத்தாராம்.
எவ்வாறு அவை வந்திருக்கும் என்று அனைவரும்
அவரவர் கருத்து சொல்ல துவங்கினாராம்.
அப்போது பாபா "நீதான் சீரடி சந்தையிலிருந்து மணிகளை
வாங்கி வந்து எவருக்கும் அளிக்காமல் உண்டாய் என்பதன் சாட்சி
இது" என்றாராம.
"பாபா! நான் சீரடி சந்தையை பார்த்ததுமில்லை.
இதுவரை பிறர்க்கு அளிக்காமல் எதையும் உண்டதுமில்லை."என்றாராம்.
உன் அருகே எவரும் இல்லையெனில் யாருக்கு அளிப்பாய்.?
என்னை நினைத்து எனக்கு அளித்திருக்கிறாயா? "என்றாராம்.
(இது நமக்கு உணர்த்துவது என்ன?
எந்த செயலையும் நாம் உணர்வு பூர்வமாக ,மனப்பூர்வமாக
செய்யும்போது இறைவனாகிய பாபாவை நினைத்து அவருக்கு
அனைத்தையும் அர்ப்பணித்த பிறகே செய்ய வேண்டும்.
அவரை நினைத்ததும் அந்த செயல் அவருக்கு உகந்ததா
என்ற எண்ணம் தோன்றும்.
இவ்வாறு அர்ப்பணித்தால் நம் மன ஆசைகள் ,கோபங்கள் நீங்க
இது ஒரு வழியாக அமையும்.
குருவும் நம் மன அவலங்களை அழுக்குகளை அழிப்பார்.
குருவின் மேல் நமக்கு அன்பும் அபிமானமும் தோன்றும்.
அவரும் நாமும் வெவ்வேறு என்ற எண்ணம் மறையும்.
குருவும் இறைவனும் ஒன்றே என்று தோன்றும்.
குருவை வணங்கினால் இறைவன் மகிழ்வார்.
பிறகென்ன? என்றும் பேரானந்தப் பெருவெள்ளம் தான். )

ஸ்ரத்தையும் சபூரியும் - 7

தபோல்கர் அவர்கள் வேலையிலிருந்து ஒய்வு பெற்றாராம்.
ஓய்வூதியம் போதிய அளவு இல்லை என வருந்தினாராம்
சிஞ்சாநிக்கர் என்பவர் பாபாவிடம் இதைக்கூறினாராம்
"அவனுடைய பாத்திரம் எப்போதும் நிரம்பியே இருக்கும். .
ஆனால் அவன் என்னை நோக்கியே எப்போதும் பிரார்த்தனை
செய்யட்டும்.தீயவர்களுடனும், மத த்வேஷகர்களுடனும்
சேர கூடாது.அடக்கத்துடனும் பணிவுடனும் இருந்தால்
எந்நாளும் மகிழ்வுடன் இருப்பார் என்றாராம்."
ஒரு சமயம் ஹேமத்பந்த் பாபாவின் திரு பாதங்களைக்
கழுவிக்கொண்டிருந்தாராம்.
(ஹெமாத் பந்த் என்பது தபோல்கரை குறிப்பிடும் பெயராம்
தபோல்கர் எளிய குடியில் பிறந்தவராம்
சுயமாகவே பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தாராம்.
எனவே குரு தேவை இல்லை என விவாதித்தாராம்
ஸ்ரீ சாயியை சந்திக்கு முன் இவ்வாறு நண்பர்களிடம் பேசினாராம்
பிறகு பகவான் தரிசனத்துக்கு சென்றாராம்.
"ஹெமட்பந்த் என்ன சொல்கிறார்?"என ஸ்ரீ சாயி கேட்டாராம்.
ஹேமத்பந்த் என்பவர் மகாராஷ்டிரத்தின் சிறந்த பண்டிதராம்
சாயி ஏன் அவ்வாறு கேட்டார் என தபோல்கர் பின்னர் அறிந்தாராம்
“நீ பெரிய பண்டிதரோ” என கேட்டிருப்பார் என அறிந்தாராம்
தன் சிறு மதியை எண்ணி வெட்கினாராம்)
(ஆயினும் சாயிசத் சரிதத்தை அவர் எழுதியதை நோக்கின்
ஸ்ரீ சாயி தீர்க்க தரிசன வாக்காகவே தோன்றுகிறது என்கிறார்கள் சாயி பக்தர்கள்)
சாதே என்ற பக்தர் வந்தாராம்
நீங்கள் கூறிய படி குரு சரிதம்
ஏழு நாட்கள் படித்தேன் என்றாராம்
ஏழாவது நாள் நீங்கள் நூலுடன் தோன்றி
ஆசீர்வதிப்பது போல் கண்டேன் என்றாராம்
ஏழு ஆண்டுகள் தொண்டு புரியும் எனக்கு
அந்த பேறு இல்லையே என தபோல்கர் வருந்தினாராம்.
பாபா அவரிடம் "சாமாவிடம் சென்று பதினைந்து ரூபாய்
நான் கேட்டதாய் வாங்கி வா" என்றாராம்.
சாமாவோ “நான் பரம ஏழை என்னிடம் பணம் ஏது” என்றாராம்
“எனது பதினைந்து வணக்கத்தை அவரிடம் கொடுங்கள்” என்றாராம்
மேலும் பாபா அவரைத் தன்னிடம் அனுப்பியதன்
காரணத்தை உணர்ந்தாராம்
பக்தனுக்கு குருவிடம் நம்பிக்கையும்பொறுமையும்
வேண்டும் என்று பாபா சொல்ல விரும்பியதை உணர்ந்தாராம்
எனவே தபோல்கரிடம் ராதா கிருஷ்ண மாயி கதையை சொன்னாராம்
ராதாபாய் என்றொரு மூதாட்டி இருந்தாராம்
பாபாவின் மேல் பெரும் அன்பு கொண்டிருந்தாராம்
தனக்கு உபதேச மொழிகளை அளிக்க வேண்டினாராம்
அதுவரை உணவு உண்கிலேன் என்று பிடிவாதம் பிடித் தாராம்
பாபா அவரைக் கூப்பிட்டு அனுப்பினாராம்
“அன்னையே!என் இப்படி வருத்திக் கொள்கிறாய்?” என்றாராம்
“உனக்கு முதலில் என் கதையைக் கூறுகிறேன்” என்றாராம்
(பாபாவின் இந்த கதை அனைவரும் அறிந்து தெளிந்து கொள்ள வேண்டிய
குரு பக்தியின் இலக்கணமாகும்)
"எனக்கு மிகச் சிறந்த குரு இருந்தார்.
வெகு காலம் அவருக்கு நான் பணிவிடை செய்தேன்
எனக்கு அவர் எந்த மந்த்ரஉபதேசமும் செய்யவில்லை.
தலையை மொட்டை அடிக்கச் சொன்னார்.
இரண்டு பைசா தக்ஷிணை கேட்டார்.
பொருள் பற்றினாலா கேட்டார்?
(பாபா தனது சீடரிடம் இரண்டு பைசா தக்ஷிணை கேட்பார்.
சிலரிடம் நிறைய பணமும்,சிலர் கொடுத்தால் மறுத்து விடவும் செய்வார்.
அவரவர் கர்ம பலனை பொறுத்து கேட்பார் என்று கூறுவார்
குருவின் மேல் கொள்ள வேண்டிய ச்ரத்தை அல்லது நம்பிக்கையும்
அவர் அருளுக்காக காத்திருக்கும் பொறுமையும்தான்
இரண்டு தக்ஷினைகள்என்றும் கூறுவார்)
இல்லை.பொறுமை, நம்பிக்கை என்ற குணங்களையே கேட்டார்.
என் குருவைப் பார்ர்த்துக் கொண்டே இருப்பேன்.
கருணை வெள்ளத்தில் மூழ்கி விடுவேன்.
பசி தாகம் இன்றி இரவும் பகலும் அவரையே அண்டி இருப்பேன்
அவர் நினைப்பன்றி வேறு சிந்தனை அற்று இருப்பேன்
இது ஒரு தக்ஷிணை.
அடுத்தது பொறுமையாகும்
பொறுமை புண்ணியங்களின் அரங்கம்.
மாயையைக் கடக்க உதவும் துடுப்பு.
கஷ்டங்களை போக்கி வெற்றி கிட்டச் செய்யும்.
பொறுமையும் நம்பிக்கையும் இரட்டைக்குழந்தைகள்.
ஆமை தன் பார்வையிலேயே எட்டி நிற்கும் குழந்தைகளைக்கூட
போஷித்த து போல என் குரு என்னைக் காத்தார்.
அது போல் நம்பிக்கையுடனும் பொறுமையுடனும்
என்னை நினை.முக்தி கிட்டும்."
இவ்வாறெல்லாம் அந்த குரு போதனை செய்தாராம்
முதியவளும் தலை வணங்கி விரதத்தைக் கைவிட்டாராம்
இந்த போதனை நம் யாவருக்கும் உரியதன்ரோ?
இந்த அற்புத மொழிகளைக் கூறிய குரு சாயியை வணங்குவோம்.
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஓம் ஸ்ரீ சாய் ஸ்ரீ சாய் ராம்

குரு பக்திக்கு இலக்கணம் - 6

சிறுவனும் அன்னையுடன் வேங்குசாவை அடைந்தாராம்;
பெரியவரிடம் அன்னை யாவையும் உரைத்தாராம்;
சிறுவனின் முக ஒளியால் அவர் கவரப்பட்டாராம்;
தான் அறிந்தவற்றை எல்லாம் சிறுவனுக்கு ஒதினாராம்;
சிறுவன் அவரைத் தாயாய் தந்தையாய் குருவாய் கருதினாராம்...
.சிறுவனோ பொறுமையாய் பணிவிடை செய்தாராம்;
குரு பக்திக்கே இலக்கணம் என்றானார் ஸ்ரீ சாயி ராம்.
இவர்கள் பிணைப்பினை கண்டவர் பொறாமை உற்றனராம்;
ஒரு நாள் தோட்டத்தில் வேங்குசா அருகில் சாய் இருந்தாராம் ;
பித்தர்கள் சாயியைக் குறிவைத்துக் கல் எறிந்தனராம்;
வேங்குசா நொடியில் அதைக் கண்டாராம்;
ஆன்ம சக்தியால் அந்தரத்தில் நிலைக்கச் செய்தாராம் ;
மற்றொரு கல் குருவைத் தாக்கியதும் சாய் பதறினாராம்;
என்னால் நீங்கள் துயருறுதல் ஆகா என்றாராம்.
நான் செல்கிறேன் என்றாராம்.
“என்னை நீ பிரியும்காலம் வந்துற்றது” என குரு சொன்னாராம் ;
ஆங்கு சென்ற கன்று ஈயா பசுவிடம் பால் கறக்க பணித்தாராம்;
அற்புத லீலை அத்தருணமே துவங்கும் என்பதை அறிந்தாராம் ;
பீறிட்டு எழுந்த பாலை நிரப்பி இளைஞனிடம் தந்தாராம்;
அவர்தம் தவ வலிமை, ஞானம் அனைத்தையும் அதில் இட்டாராம்;
நீ இனி பரிபூரணன் மேற்கு நோக்கிப் பயணி" என்றாராம்;
நிலை நிறுத்திய கல்லை அளித்தாராம்;
(குருவின் நினைவாக சாய் அதில்தான் தலை சாய்ப்பாராம்;)
பிணமான கல் எறி தீயனை சாய் உயிர்ப்பித்தாராம்;
குருவை வணங்கி மேற்கே நோக்கி நடந்தாராம்.

குரு பக்திக்கே இலக்கணமான குரு சாயியை வணங்குவோம்

வளர்ந்ததோர் மரபு - 5

வளர்ந்தது இஸ்லாமிய மரபினில்
மழலையை பாகிர் அன்புடன் தூக்கிச் சென்றாராம்.
மழலை இல்லா அவர் மனைவி மனம் மகிழ்ந்தாராம்;
பாசமாய் இஸ்லாமிய மரபினில் வளர்த்தனராம்;
மழலையும் தளிர் நடை போட்டனராம்;
பெரியவர் உடல் நலம் குன்றினாராம்;
"நான் உயிர் நீத்ததும் சேலூர் செல்லுங்கள்" என்றாராம்;
வேத வித்தகர் கோபால்ராவ்தேஷ்முக் காப்பார் என்றாராம்;
சிறுவனும் அன்னையுடன் வேங்குசாவை அடைந்தாராம
அந்தணர் குலத்தில் உதித்தாராம் சாயிராம்
.இஸ்லாமிய மரபினில் வளர்ந்தாராம் சாயிராம்.
இனம் ,மதம் கடந்த ஒருமைப்பாடின் அவதாரம் சாயிராம்.
பின்னாளில் எல்லா மரபினரும் பேதமின்றி துதித்தனராம்.
இன்றும் ஷிர்டியில் ராம நவமி தினம் அதற்குச் சான்றாம்

ஸ்ரீ சாய் திரு அவதாரம் - 4

திரு அவதாரம்
பத்ரி என்றொரு புண்ணிய நகராம்
நகர் உறை ஹரி சாதே பெரும் வித்தகராம்;
வித்தகர் மணந்ததோ இலக்குமி என்பவராம;
இருவரும் ஒழுகிய மரபதில் அந்தணராம் ;
மழலை வரம் வேண்டி தவம் செய்தனராம்;
ஆங்கே சூரியனாய் உதித்தாராம் சாயி ராம்.
ஜாதகத்தைக் கணித்திடவே ஜோதிடரும் வந்தாராம்;
இம்மழலை தெய்வ அவதாரம் என்றனராம்;
ஆண் மூலம் அரசாளும் என்றவரும் சொன்னாராம் ;
விரைவில் பெற்றோர்க்கு முக்தி என்றாராம்;
பெற்றவர் பரமனை துதி செய்தனராம்;
கனவில் பரமனும் இதுவே சொன்னாராம்;
பாகிர் ஒருவர் வந்திடுவார் என்றாராம்;
மழலையை அவரிடம் கொடுக்கச் சொன்னாராம்;
மறுநாள் வந்தவர் மழலையை கேட்டாராம்;
அழுத குழவி அவரைக் கண்டதும் சிரித்தாராம்;
பரமன் சொன்ன பாகீர் இவரென்று உணர்ந்தனராம்;
கொடுத்தவன் கேட்கிறான் என்று நினைத்தனராம்;
மகிழ்வுடன் மழலையை அளித்தனராம்.
பெற்றவர் இருவரும் இறையடி அடைந்தனராம்.

ஸ்ரீ சாய் சத் கதை மகிமை - 3

திரு பாபாவின் சத் கதை மகிமை
திரு பாபாவின் திரு வாக்கில் உள்ளபடி
“என் நாமத்தை அன்புடன் ஒருவர் சொன்னால் ,
அவருடைய எல்லா ஆசைகளையும் நான் பூர்த்தி செய்து
அவருடைய பக்தியைஅதிகரிக்கச் செய்வேன்
என் சரிதத்தையும் அற்புத செயல்களையும்
யார் பாடுகிறாரோ அவருக்குமுன்னும் பின்னும்
மற்றும் எல்லா புறங்களிலும் தோன்றி காப்பேன்.
என்னிடம் ஆத்மா பூர்வமாகவும் இதய பூர்வமாகவும் பக்தி கொண்ட
என் பக்தர்கள் இந்த கதையைக் கேட்டு மிகவும் மகிழ்வர்.
என் லீலையைப் பாடுபவர்களுக்கு எல்லை இல்லா பூரிப்பும்,
நிலைத்த மன நிறைவும் தருவேன் என்பதை நம்புங்கள்.
என்னிடம் பூரணமாக சரணடைந்தோரை ,என்னை பூசிப்பவரைஎன்னை
நினைப்பவரை என்னைத் த்யாநிப்பவரை துன்பங்களிலிருந்து
விடுவிப்பேன்.இது எனக்கு மட்டும் உரித்த சீரிய குணம்.
பூவுலக பொருட்களும் உணர்வுகளும் அவர்களுக்கு நினைவிலேயே
இருக்காதுஎன் பக்தர்களை மரணத்திலிருந்து காப்பேன்.
என் கதையை கேட்பவர் நோய் நொடி அண்டாமல் வாழ ஆசி அளிப்பேன்
அதனால் மகிழ்வும் நிறைவும் அடைய என் கதையை பக்தியுடன் கேட்டு
அதை த்யானித்து உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
என் பக்தர்களின் அகங்காரங்களும்,ஆணவமும் அழியும்.
கேட்பவர்கள் மனம் அமைதி உறும்.,
மனம் ஒன்றி, நம்பிக்கையுடன் கேட்டாலோ
பேரின்பபேறு நிலையையே அடையலாம்.”
சாயி சாயி என்ற நாமம் மனம் வாக்கு செய்கை போன்றவற்றினால் செய்யும் பாவங்களை நீக்கும்."
சாயி ராம்.

ஸ்ரீ சாய் வந்தனம் - 2

ஸ்ரீ சாய் கணேச துதி
ஸ்ரீ சாய் கணேசனை துதி செய்து துவங்கும் எப்பணிக்கும
எப்பிணியும் எவ்விடரும் எந்நாளும் வாராது என்பதறிவோம் .
துதி செய் கணேச சாய் கணேச சாய் கணேச நாமம்தான்
துதி செய் கணேச சாய் கணேச சாய் கணேச நாமம்தான்
ஓம் ஸ்ரீ சாய் கணேசாய நமஹ.
ஸ்ரீ சாய் ஜெகதீஸ்வரி துதி
ஸ்ரீ சாய் ஜெகதீஸ்வரியை துதி செய்து துவங்கும் எப்பணிக்கும்
ஞானமும் அறிவும் எந்நாளும் வற்றாது என்பதறிவோம் .
துதி செய் ஈஸ்வரி சர்வேச்வரி ஸாயேஸ்வரி நாமம்தான்
துதி செய் ஈஸ்வரி சர்வேச்வரி ஸாயேஸ்வரி நாமம்தான்
ஓம் ஸ்ரீ சாய் ஈஸ்வர்யை நமஹ.
ஓம் ஸ்ரீ சாய் குரு துதி
ஸ்ரீ தத்தாத்ரேயராம் சாயியை துதி செய்து துவங்கும் எப்பணிக்கும்
உற்ற துணையும் அவரருள் அன்றி மற்றேது என்பதறிவோம் .
துதி செய் குரு சாயி குரு சாயி குரு சாயி நாமம்தான்.
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஓம் ஸ்ரீ சாய் ஸ்ரீ சாய் ராம்
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஓம் ஸ்ரீ சாய் ஸ்ரீ சாய் ராம்

ஸ்ரீ சாயி சரிதம் /முன்னுரை - 1

ஓம் ஸ்ரீ சாயிராம்
சாயி நாதருக்கு என் பணிவான வணக்கங்கள்.
சாயி நாதனின் பவித்ரமான பாதங்களைப் பணிகிறேன்.
சிரம் தாழ்த்தி இரு கரங்கள் கூப்பித் தொழுகிறேன்.
ஸ்ரீ சாயி ராமனின் திரு அவதாரம் ஒரு அற்புத அவதாரம்.
ஸ்ரீ சாயி ராமனின் திரு நாமம் சொல்வது ஒரு இனிய அனுபவம்
ஸ்ரீ சாயி ராமனின் திரு உருவ தரிசனம் ஒரு பேரின்ப வைபவம்.
ஸ்ரீ சாயி ராமனின் சத் சரிதை கேட்பது, சொல்வது, படிப்பது,எழுதுவது,
அவரை நினைப்பது ஒரு தெய்வீக நிதர்சனம்.
சான்றோர், அறிந்தோர், தெரிந்தோர், தொழுதோர் ,அனுபவம் நேரிடையாக
அடைந்தோர் என சாயி பக்தர்கள் அவர் புகழைப்  பல விதமாக எழுதியும் , பாடியும்,சொல்லியும், துதித்தும், பூசித்தும் வருகின்றனர்.
பல மொழிகளில் பல வடிவங்களில் பல நூல்களும் பாடல்களும்
எண்ணிலடங்காது இருப்பினும் ஸ்ரீ சாயி அவர்களே ஆசியும் அனுமதியும்
அளித்தது திரு தபோல்கர் அவர்களுக்குத்தான்.திரு குணா , திரு நரசிம்ஹச்வாமிஜி போன்றோர் மிகச் சிறந்த முறையில் சாயி நாதரின் புகழைசரிதத்தை ,எழுதியுள்ளனர்.
அவ்வண்ணம் இருக்கையில் எளியேனாகிய நான் என்ன புதிதாகவா எழுத முடியும்?
பின் என் முயற்சியின் நோக்கம் என்ன?யானேதும் அறியேன்.அது தெய்வத்திரு உள்ளமே.நான் நினைத்தால் மட்டுமே எழுதி விட முடியுமா?அந்த பரமன் திரு உள்ளமிதுவெனே கருதியே நான் எழுத துவங்கினேன்.
எழுதத்துவங்கியதும் அவரது சத் சரிதையை படிக்கத்துவங்கினேன்.

ஸ்ரீ சாயி சத் சரிதம் படிப்பது, பாராயணம் செய்வது என்பது ஒரு தவம் போல், விரதம் போல் வேத பாராயணம் செய்வதற்கு நிகராக செய்ய வேண்டியதாகும்
ஏனெனில் வேதத்தில் கூறிய பல கருத்துகளையும் திரு சாய் எளிய முறையில் கதைகளாகச் சொல்லியும்,நன்முறையில் போதித்தும்,இப்புவியில் மகானாக வாழ்ந்து காட்டியும் விளக்கியுள்ளார்.அவருடன் வாழ்ந்த அவரது பக்தர்கள் அடைந்த அனுபவங்களே நமக்கு படிப்பினையாகின்றது.
ஸ்ரீ.சாய் சத் சரிதத்தை மேலோட்டமாகவோ,சம்ப்ரதாயமாகவோ படிக்காமல் அந்த மகானின்  வாழ்க்கை முறை  நமக்கு என்னென்ன படிப்பினைகளை கற்றுத் தருகிறது, அவரின் செயல்கள்,  போதனைகளை நாம் எவ்வண்ணம் உள்வாங்கிக் கொண்டு வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்றசிந்தனையுடன்படிக்க ஆரம்பித்ததும்,நான் கடலின் துளியாய் புரிந்து கொண்டதை மற்றவர்களும் தெரிந்துணர உதவும் என்ற எண்ணமே இந்த பணியை துவங்க வித்திட்டது

இந்த பெருங்கடலில் ஒரு சிறு துளியாய் அடியேனும் திரு சாயி நாமம்சொல்லி அவர் சத் சரிதத்தின் சில சாரங்களை உரை நடையில் இல்லாமல் சுருங்கிய கதை வடிவில் ஒவ்வொரு வரியும் இயல்பாக ராம் என்றுமுடியும் வண்ணம் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் புகுத்தினார்அந்த அற்புத நாதர்.
அதற்கு கருத்தும், வடிவமும் கொடுப்பதும் அவரே என்று உணர்ந்து நான்
எந்த தவறும் செய்யா வண்ணம் காத்தருள் என வேண்டி, செய்தாலும் அறிந்தோ அறியாமலோ செய்த பிழைகளைப் பொறுத்து திருத்திக்காத்தருள வேண்டி இந்த சிறு எழுத்துப் பணியை துவங்கினேன்.
இந்த பணிக்கு நான் ஸ்ரீ.தபோல்கர் அவர்கள் எழுதியுள்ள "ஸ்ரீ சாய் சத்ச்சரிதா " என்ற புத்தகத்திலிருந்தே சம்பவங்களை எடுத்துள்ளேன். மேலும் வலைத்தளத்தில் தேடுகையில் கிடைத்த பல விஷயங்களையும் இதில் எழுதியுள்ளேன்.
சாய் நாதரைப் பற்றி எழுதியுள்ள,பாடியுள்ள,பல கோடி பக்த கோடி மகான்களுக்கும் எனது நன்றியையும், வணக்கங்களையும் சொல்லி சாயி நாமம் சொல்லி துவங்குகிறேன்

சமஸ்த சத்குரு சாய் ராம் மகாராஜ்கி ஜெய்!
இதன் முதல் படியாக ஸ்ரீ சாயி, தபோல்கருக்கு உரைத்ததை எழுதி
இப்பணியைத் துவங்குகிறேன்.ஸ்ரீ சாயி நாதருக்கே இந்த பணியை சமர்ப்பணம் செய்கிறேன்.ஸ்ரீ சாயி ராம்.