Tuesday, January 05, 2010

ஸ்ரீ சாயி சரிதம் /முன்னுரை - 1

ஓம் ஸ்ரீ சாயிராம்
சாயி நாதருக்கு என் பணிவான வணக்கங்கள்.
சாயி நாதனின் பவித்ரமான பாதங்களைப் பணிகிறேன்.
சிரம் தாழ்த்தி இரு கரங்கள் கூப்பித் தொழுகிறேன்.
ஸ்ரீ சாயி ராமனின் திரு அவதாரம் ஒரு அற்புத அவதாரம்.
ஸ்ரீ சாயி ராமனின் திரு நாமம் சொல்வது ஒரு இனிய அனுபவம்
ஸ்ரீ சாயி ராமனின் திரு உருவ தரிசனம் ஒரு பேரின்ப வைபவம்.
ஸ்ரீ சாயி ராமனின் சத் சரிதை கேட்பது, சொல்வது, படிப்பது,எழுதுவது,
அவரை நினைப்பது ஒரு தெய்வீக நிதர்சனம்.
சான்றோர், அறிந்தோர், தெரிந்தோர், தொழுதோர் ,அனுபவம் நேரிடையாக
அடைந்தோர் என சாயி பக்தர்கள் அவர் புகழைப்  பல விதமாக எழுதியும் , பாடியும்,சொல்லியும், துதித்தும், பூசித்தும் வருகின்றனர்.
பல மொழிகளில் பல வடிவங்களில் பல நூல்களும் பாடல்களும்
எண்ணிலடங்காது இருப்பினும் ஸ்ரீ சாயி அவர்களே ஆசியும் அனுமதியும்
அளித்தது திரு தபோல்கர் அவர்களுக்குத்தான்.திரு குணா , திரு நரசிம்ஹச்வாமிஜி போன்றோர் மிகச் சிறந்த முறையில் சாயி நாதரின் புகழைசரிதத்தை ,எழுதியுள்ளனர்.
அவ்வண்ணம் இருக்கையில் எளியேனாகிய நான் என்ன புதிதாகவா எழுத முடியும்?
பின் என் முயற்சியின் நோக்கம் என்ன?யானேதும் அறியேன்.அது தெய்வத்திரு உள்ளமே.நான் நினைத்தால் மட்டுமே எழுதி விட முடியுமா?அந்த பரமன் திரு உள்ளமிதுவெனே கருதியே நான் எழுத துவங்கினேன்.
எழுதத்துவங்கியதும் அவரது சத் சரிதையை படிக்கத்துவங்கினேன்.

ஸ்ரீ சாயி சத் சரிதம் படிப்பது, பாராயணம் செய்வது என்பது ஒரு தவம் போல், விரதம் போல் வேத பாராயணம் செய்வதற்கு நிகராக செய்ய வேண்டியதாகும்
ஏனெனில் வேதத்தில் கூறிய பல கருத்துகளையும் திரு சாய் எளிய முறையில் கதைகளாகச் சொல்லியும்,நன்முறையில் போதித்தும்,இப்புவியில் மகானாக வாழ்ந்து காட்டியும் விளக்கியுள்ளார்.அவருடன் வாழ்ந்த அவரது பக்தர்கள் அடைந்த அனுபவங்களே நமக்கு படிப்பினையாகின்றது.
ஸ்ரீ.சாய் சத் சரிதத்தை மேலோட்டமாகவோ,சம்ப்ரதாயமாகவோ படிக்காமல் அந்த மகானின்  வாழ்க்கை முறை  நமக்கு என்னென்ன படிப்பினைகளை கற்றுத் தருகிறது, அவரின் செயல்கள்,  போதனைகளை நாம் எவ்வண்ணம் உள்வாங்கிக் கொண்டு வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்றசிந்தனையுடன்படிக்க ஆரம்பித்ததும்,நான் கடலின் துளியாய் புரிந்து கொண்டதை மற்றவர்களும் தெரிந்துணர உதவும் என்ற எண்ணமே இந்த பணியை துவங்க வித்திட்டது

இந்த பெருங்கடலில் ஒரு சிறு துளியாய் அடியேனும் திரு சாயி நாமம்சொல்லி அவர் சத் சரிதத்தின் சில சாரங்களை உரை நடையில் இல்லாமல் சுருங்கிய கதை வடிவில் ஒவ்வொரு வரியும் இயல்பாக ராம் என்றுமுடியும் வண்ணம் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் புகுத்தினார்அந்த அற்புத நாதர்.
அதற்கு கருத்தும், வடிவமும் கொடுப்பதும் அவரே என்று உணர்ந்து நான்
எந்த தவறும் செய்யா வண்ணம் காத்தருள் என வேண்டி, செய்தாலும் அறிந்தோ அறியாமலோ செய்த பிழைகளைப் பொறுத்து திருத்திக்காத்தருள வேண்டி இந்த சிறு எழுத்துப் பணியை துவங்கினேன்.
இந்த பணிக்கு நான் ஸ்ரீ.தபோல்கர் அவர்கள் எழுதியுள்ள "ஸ்ரீ சாய் சத்ச்சரிதா " என்ற புத்தகத்திலிருந்தே சம்பவங்களை எடுத்துள்ளேன். மேலும் வலைத்தளத்தில் தேடுகையில் கிடைத்த பல விஷயங்களையும் இதில் எழுதியுள்ளேன்.
சாய் நாதரைப் பற்றி எழுதியுள்ள,பாடியுள்ள,பல கோடி பக்த கோடி மகான்களுக்கும் எனது நன்றியையும், வணக்கங்களையும் சொல்லி சாயி நாமம் சொல்லி துவங்குகிறேன்

சமஸ்த சத்குரு சாய் ராம் மகாராஜ்கி ஜெய்!
இதன் முதல் படியாக ஸ்ரீ சாயி, தபோல்கருக்கு உரைத்ததை எழுதி
இப்பணியைத் துவங்குகிறேன்.ஸ்ரீ சாயி நாதருக்கே இந்த பணியை சமர்ப்பணம் செய்கிறேன்.ஸ்ரீ சாயி ராம்.

2 comments:

gurubaran said...

Sairam ..... Thanks a lot for writing Sai satcharitha in a poetry form

Kala BN said...

Gurubaran
sairam.
Thanks for your appreciation.