Thursday, April 22, 2010

அழைத்தால் வருவார் எவ்வுருவிலும் - 36

பக்தர்கள் அன்புடன் அழைத்தால் தவறாமல் வருவார் சாயி ராம்
ஆனால் அவர் எந்த உருவிலும் வருவாராம்
இதை அறிந்து கொண்டார்  மட்டுமே அவர் வருகையை உணருவராம்
ஹெமட்பந்த் மிகச் சிறந்த சாய் பக்தர் அல்லவா?
எனவே ஒரு முறை அவர் கனவில் சாய் வந்தாராம்
உன் வீட்டில் உணவருந்த வருகிறேன் என்றாராம்
அன்று பவுர்ணமி தினம் .ஹோலி பண்டிகை.
அவர் தன் மனைவியிடம் கனவை சொன்னாராம்
அவர் மனைவியோ நம்பிக்கை இன்றி
பலவித நிவேதனங்கள் படைக்கப்படும் த்வாரக மாயியை விட்டு
எளிய உணவு உண்ண நம் வீட்டுக்கு எங்கே வருவார் என்றாராம்
இருப்பினும் உணவருந்தும் நேரம் வந்ததும் வீட்டிலுள்ளவர்களோடு
ஒரு தனி இலை விரித்து விருந்தினர் அல்லது அகதிக்கு என்று
பதார்த்தங்கள் பரிமாறப்பட்டனவாம்
அனைவரும் மந்திரம் சொல்லி இலையை சுத்தி செய்தனராம்
ஸ்ரீ கிருஷ்ணருக்கு நிவேதனம் செய்தனராம்
இலைகளில் நெய் பரிமாறினராம்
அந்த நேரம் காலடி ஓசை கேட்டதை ஹெமட்பந்த் உணர்ந்தாராம்
உடனே ஹெமட்பந்த் எழுந்து விரைந்தாராம்
கதவைத்திறந்ததும் "உணவருந்தும் நேரம் பாதியில் எழுந்து வந்தீர் போலும்
நாங்கள் அலி முகமத் , மௌலானா இஸ்மு முஜவர்.
உங்களிடம் சமர்பிக்க ஒன்று உள்ளது. அதை பெற்றுக்கொள்ளுங்கள்.
அதன் பின்னணியை பிறகு வந்து கூறுகிறோம்" என்றனராம்
அவர்கள் அளித்த  பொட்டலத்தில் சாயியின் திரு உருவ படம் இருந்தததைப் பார்த்தாராம்
ஹெமட்பந்த் மெய் சிலிர்த்து கண்ணீர் சொரிந்தாராம்
சாயியே உணவருந்த வந்து விட்டார் என்று அறிந்தாராம்
அந்த திரு உருவ படத்தை பரிமாறப்பட்ட இலையின் முன் வைத்து வணங்கி
அனைவரும் உணவருந்தினராம்
அன்புடன் பக்தியுடன் அழைத்தால் வருவார் அந்த சாய் நாதர்
வருவார் என்ற நம்பிக்கையும் வைத்திடல் வேண்டும்
எவ்வுருவிலும் வருவார் என்றும் அதை உணர தூய பக்தியும் வேண்டும்.
அவரை வணங்கி அவரையே நினைத்து இருத்தல் நம் பாக்கியம் அன்றோ

Wednesday, April 14, 2010

விதைத்ததே அறுவடையாகும் - 35

காகா மகாஜனியின் நண்பர் ஒருவர் இருந்தாராம்
உருவ வழி பாட்டிலோ தனி மனித வழிபாட்டிலோ நம்பிக்கை அற்றவராம்
ஒரு ஆர்வம் காரணமாய் சாயியை  தரிசிக்க விழைந்தாராம்
ஆனால்  அவரை வணங்கவோ அவருக்கு தட்சிணை கொடுக்கவோ சம்மதியேன் என்றாராம்.
இவர்கள் சீரடியை அடைந்தனராம்
பாபா இவரை நோக்கி "வாருங்கள் ஐயா" என்றாராம்
அந்த குரல் நண்பரின் தந்தையின் குரல் போல ஒலிக்கவே நண்பர்
உடனே பாபாவின் கால்களில் வீழ்ந்து வணங்கினாராம்
காலையிலும் மதியமும் பாபாவை தரிசித்தனராம்
இரு முறையும் பாபா காகாவிடம் தட்சிணை கேட்டாராம்
நண்பர் தன்னிடம் ஏன் தட்சிணை கேட்கவில்லை என்று பாபவிடமே கேட்டாராம்
"நீ  கொடுக்க விரும்பவில்லை. .  அதனால் கேட்கவில்லை.
இப்போது கொடுக்கிறாயா/என்றாராம்.
அவர் காகா அளித்த அதே பதினேழு ரூபாயை அளித்தாராம்.
பாபா அவர்களை ஆசிர்வதித்து அனுப்பினாராம்.
பிறகு இவ்வாறு சொன்னாராம்
"நான் எவரிடமிருந்தாவது ஒரு ரூபாய் பெற்றால் அதை பத்து மடங்காய் திருப்பித்தருவேன்
யாரிடமிருந்து பெற வேண்டும் என்பதை அந்த இறைவன் தீர்மானிப்பார்
நீங்கள் ஏற்கனவே கடன் பட்டிருந்தால் அதை திருப்பி தருகிறீர்கள்
செல்வம் தருமம் செய்ய பயன் பட வேண்டும்
சொந்த சுகத்திற்காக உபயோகிக்க கூடாது.
நீங்கள் கொடுத்தால்தான் உங்களுக்கு அது திரும்ப கிடைக்கும்
கொடுப்பதன் மூலம் வைராக்கியம், பக்தி,ஞானம் வளரும்." என்றாராம்.

Sunday, April 11, 2010

கனவை நனவாக்குபவன் அவனே - 34

நாசிக் நகரில் காகாஜி வைத்யா என்பவர் இருந்தாராம்
சப்த ஸ்ரிங்கி மாதா ஆலயத்தில் பூசாரியாக  இருந்தாராம்
ஆயினும் பெரும் மனக்குழப்பத்திலும் அமைதியற்றும் இருந்தாராம்
அன்னையை மனமுருகி வேண்டி நின்றாராம்
அவர் கனவில் அன்னை தோன்றி"நீ பாபாவிடம் செல்.மன அமைதி கிட்டும்" என்றாராம்
பாபா யார்,எங்கிருக்கிறார் என்று அறிவதற்குள் கனவு கலைந்து விட்டதாம்
எனவே அன்னை த்ரயம்பகேஷ்வர் எனப்படும் சிவனை பாபா என்று சொல்லி இருப்பார் என எண்ணி த்ரய்ம்பகேஷ்வரம் சென்று  ருத்ரம் சொல்லல், அபிஷேகம் செய்தல் என்று நாட்களை கடத்தினாராம்
மனம் அமைதி அடையவில்லையே என்று மீண்டும் அன்னையை வேண்டினாராம்.
அன்னை தோன்றி"நான் த்ர்யம்பகேஸ்வரை சொல்லவில்லை.சாய் சமர்த்தரை சொன்னேன்"என்றாராம்
மீண்டும் சாய் யாரென்று புரியாமல் காகாஜி தவித்தாராம்
ஆனால் சாயியை ஒரு பக்தர் காண விரும்பினால்,சாயியே  அவரைத்தன்னிடத்தே
வரச்செய்ய வழியும் செய்து கொடுப்ப்பார்.அவர் நினைத்தால்தான் மரத்தின் இலை கூட அசையுமன்றோ?
ஷாமா என்பவர் பாபாவின் பெரும் பக்தராம்
அவர் சிறு வயதில் நோயுற்றபோது அவர் தாயார் சப்த ஸ்ரிங்கி அன்னையிடம்
வேண்டுதல் வைத்தாராம்
தன் பிள்ளையை  காப்பாற்றினால் சன்னதிக்கு அழைத்து வருவதாக வேண்டினாராம்
சிறிது காலத்திற்கு பிறகு அன்னையின் மார்பகத்தில் தொந்தரவு ஏற்பட்டதாம்
வெள்ளியில் மார்பகம் செய்து போடுவதாக வேண்டினாராம்
இறக்கும் தருவாயில் இதை மகனுக்கு சொன்னாராம்
ஆனால் ஷ்யாமா இதை மறந்து விட்டாராம்
ஒரு சோதிடர் இதை நினைவுபடுத்தியதும் ஷ்யாமா பாவிடம் சென்றாராம்
"நீயே என் தெய்வம்.அதனால் இந்த வேண்டுதலை உனக்கே செய்கிறேன் "என்றாராம்
பாபா மறுத்துவிட்டு அவரை சப்த ஸ்ரிங்கி அன்னைக்கு காணிக்கையை செலுத்த சொல்லிவிட்டாராம்.
இவ்வாறு ஷ்யாமா காகாஜி இருக்கும் ஊருக்கே வந்து விட்டாராம்.
காகாஜி அவர் யாரென்று வினவினாராம்
ஷிரிடியில் இருந்து வந்ததாக சொன்னதோடு பாபாவின் லீலைகளையும் சொன்னாராம்
இதைக்கேட்ட காகாஜி மகிழ்வுற்று ஷ்யாமாவுடன் ஷிர்டி சென்றாராம்
சாய் நாதனை தரிசித்ததும் அந்த தரிசன இன்பமே அவரை சாந்தமாக்கிற்றாம்
சில நாட்கள் இருந்து தரிசித்த பின்னர் பாபாவின் ஆசியுடன், உதியுடனும்
அவர் அமைதியாக ஊர் திரும்பினாராம்.
நீயே எல்லாம் என்ற ஷ்யாமாவை அன்னை சப்த்ஸ்ரின்கியை தரிசிக்க
அனுப்பியும் த்ரயம்பகேஸ்வறரை  தரிசித்த காகாஜியை  தன்னிடம் வரவழைத்ததும்
அந்த பகவானின் லீலையன்றி வேறேது!

Tuesday, April 06, 2010

நம்மையும் நம் எண்ணங்களையும் ஆட்டுவிப்பவன் -33

ஸ்ரீ வசுதேவானந்தா சரஸ்வதி என்ற யோகி, தத்தாத்ரேயரின் பக்தராம்
ஆந்திராவில் கோதாவரி கரையருகே முகாமிட்டிருந்தாராம்
அவரை தரிசிக்க புண்டரீகராவ் என்பவர் நண்பர்களுடன் சென்றாராம்
பேச்சு வாக்கில் ஷிர்டி செல்வது  பற்றியும் சாய்  நாதர் பற்றியும் பேசினாராம்
அதைக்கேட்ட சுவாமி ஒரு தேங்காயை அவர்களிடம் கொடுத்தாராம்
"இதை ஷீரடியில் இருக்கும் என் தமையன் சாயிடம் கொடுத்து  என் பணிவான வணக்கங்களைத் தெரிவியுங்கள் .என்னை மறக்க வேண்டாம் என்று சொல்லுங்கள்:" என்றாராம்
நண்பர்கள் அதை பெற்றுக்கொண்டு ஷிர்டி பயணப் பட்டனராம்
செல்லும் வழியில் ஒரு ஆற்றினருகே அமர்ந்து சிறிது அவல் உண்டு விட்டு
நீரருந்தலாம் என்று அமர்ந்தனராம்
அவல் காரமாயிருந்ததால் ஒருவர் தேங்காயை உடைத்து அந்த தேங்காய் துருவலை
சேர்த்ததால் காரம் குறையும் என்று சொன்னாராம்
தேங்காய் உடைக்கப்பட்டு துருவல் சேர்க்கப்பட்டு அவல் உண்ணப்பட்டதும்
அந்த தேங்காய் சுவாமிகள் சாயியிடம் சேர்க்க சொன்னது என்று உணர்ந்து
பதறி விட்டனராம்
சீரடி சென்று அந்த நாதன் காலில் வீழ்ந்து மன்னிக்கும்படி கேட்டனராம்
"உங்களிடம் அந்த தேங்காயை ஒப்படைக்கும்படி செய்ததும் நானே.உடைக்கச் செய்ததும் நானே" என்று உணருங்கள்
நல்லதோ கேட்டதோ எல்லா செயல்களுக்கும் அவனே பொறுப்பு.
நான் என்ற அகம்பாவத்தை களையுங்கள் .எல்லாவற்றுற்கும் அவனே கர்த்தா என்று உணருங்கள் .அவனடியில் வீழ்ந்து சரணடையுங்கள்" என்றாராம்
எப்பேர்பட்ட தத்துவ நெறி
அற்புதமாக எளிமையாக நம்மை மேம்படுத்தும் அந்த  சாய் நாதனின் பாதங்களில் வீழ்ந்து வணங்குவோம்